தெலுங்கானாவில் ஷோரூமில் இருந்து தனது புத்தம் புதிய காரை டெலிவரி எடுக்க வந்த வாடிக்கையாளர் தவறுதலாக கியரை மாற்றி ஆக்சலேட்டரை இயக்கியதால் முதல் தளத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அல்காபுரியிலுள்ள டாடா ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட டியாகோ கார் ஒன்று ஹைட்ராலிக் லிப்ட் மூலம் முதல் தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு இறக்க தயாராக இருந்தது. அப்போது புதிதாக தான் வாங்கிய காரில் ஏறி அமர்ந்திருந்த வாடிக்கையாளரிடம் காரின் சிறப்பம்சங்கள் குறித்து விற்பனையாளர்கள் விளக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, காரின் கியரை டிரைவ் மோடுக்கு மாற்றி ஆக்சலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்று முதல் தளத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.கார் கவிழ்ந்ததில் கீழே நின்றிருந்த ஒரு காரும், 4 இருசக்கர வாகனங்களும் நொறுங்கின.
காருக்குள் இருந்த வாடிக்கையாளரும், கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு நபரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.