இரண்டு Sikorsky MH-60R ரோமியோ ஹெலிகாப்டர்களை, சாண்டியாகோ அருகே அமைந்துள்ள தளத்தில் வைத்து, அமெரிக்க கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.
கடற்படையில் கண்காணிப்பு மற்றும் உளவுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான Sikorsky MH-60R ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது.
இந்திய-அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 24 ஹெலிகாப்டர்களை வாங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ரோமியோ ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக, 15 கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய குழுவினருக்கு ஃபுளோரிடாவில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு Sikorsky MH-60R ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை இந்திய கடற்படை வசம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங், இந்தியக் கடற்படையின் அதிகாரி ரண்வீத் சிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும் ஒரு ஹெலிகாப்டர் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிரிகளின் கப்பல்கள், நீர்மூழ்கிகளை தாக்கி அழிப்பது, வான்வழியாக கடற்படைக்கு வரும் அச்சுறுத்தல்களை முறியடிப்பது உள்ளிட்டவற்றில் இந்த ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்காற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.