இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை எந்த வித கொரோனா பரிசோதனையும் இல்லாமல் விமான நிலையங்களில் அனுமதிக்குமாறு மும்பை மாநகராட்சி சார்பில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா அரசு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்தது. விமான நிலையத்தில் பயணிகளிடம் 48 மணி நேரத்திற்குட்பட்ட RT-PCR அறிக்கை இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தாமல் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் வேகம் பெற்றுள்ள நிலையில் இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கத் தேவையில்லை என்று மாநகராட்சி ஆணையர் ஐ.எஸ்.சாஹல் அரசு தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பயணிகள் பலர் தொழில் நிமித்தமாக காலையில் வந்துவிட்டு மாலையில் திரும்பிச் செல்வதாகவும், அவர்களுக்கு கொரனோ பரிசோதனை சான்றிதழ் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், சண்டிகர் உள்பட பல விமான நிலையங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசோதனை அறிக்கையை கொண்டு வருவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.