இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. 3 பேரை காணவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் ஞாயிறு இரவு முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தர்மசாலா, kangara, ஷாஹபுர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஆடு மாடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல வீடுகளும் இடிந்து சாய்ந்தன.
மாநிலத்தின் நெடுஞ்சாலைகளும் சண்டிகர், மணாலியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருப்பதால், 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பலமணி நேரமாக காத்திருந்தன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமி உள்பட 13 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகளுக்கு வரவேண்டாம் என்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இமாச்சல் நிலவரத்தை மத்திய அரசு நேரடியாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்