நான்கு லட்சம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் நாடு முழுவதும் ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் உருவாகி வருவதாகப் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வழங்கல் மறுசீரமைப்புத் தொடர்பான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்ய 1500க்கு மேற்பட்ட ஆலைகள் நிறுவப்பட்டு வருவது குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.
இவையனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் மருத்துவமனைகளில் 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆலைகளை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர மாநில அரசுடன் இணைந்து பணியாற்றும்படி அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்தினார்.