இரண்டாவது முறையாக பிரதமராக வந்த பின்னர் முதன் முதலாக மோடி தமது அமைச்சரவையை ஓரிரு தினங்களில் மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள 5 மாநில தேர்தல் மற்றும் 2024 பொதுத் தேர்தலை வைத்து அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை மோடி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்சித் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்டோருடன் மோடி கலந்தாலோசனை நடத்தி புதிய அமைச்சர்களை நியமிப்பது பற்றிய முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், புதிதாக அமைச்சராவார்கள் என எதிர்பார்க்கப்படும் தலைவர்கள் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஒரு முக்கிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், மகாராஷ்டிராவில் இருந்து நாராயண் ரானே, சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் பாஜக சார்பில் அமைச்சர்களாவார்கள் என கூறப்படுகிறது. கூட்டணிக்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து ஆர்சிபி சிங், லாலன் சிங், அப்னா தளம் கட்சியின் அனுபிரியா பட்டேல் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
அமைச்சரவையில் மேற்கு வங்கத்திற்கு கூடுதல் பிரதிநித்துவம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. புதிதாக சுமார் 20 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர்களாக 83 பேர் வரை நியமிக்கலாம். தற்போது 53 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.