இந்திய ராணுவ உடைமைகளைக் குறிவைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்முவில் டிரோன்கள் மூலம் விமானப்படைத்தளத்தில் குண்டுகள் வெடித்த சம்பவத்தையடுத்து விமானப்படை தளங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய பிபின் ராவத், இதே போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் ராணுவ சொத்துகளை சேதப்படுத்தவோ தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ முயன்றால் மிக்கடுமையான முறையில் பதிலடித் தரப்படும் என்று தெரிவித்தார்.
பதிலடிக்கான காலம் நேரம் இடம் போன்றவற்றை முடிவு செய்யும் உரிமை ராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
அடுத்த தாக்குதல் ஜம்முவில் மீண்டும் நடைபெறுமா என்பது குறித்து உறுதி செய்ய முடியாது என்று கூறிய ராவத், வேறு விமானப்படைத் தளங்களும் குறிவைக்கப்படலாம் என்றார்.