நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் நாட்டிற்கு உதவி வருவதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் சார்பில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய் மனித குலத்துக்கு ஆற்றிய தொண்டை அங்கீகரிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூலை ஒன்றாம் நாள் தேசிய மருத்துவர் நாளாக 1991ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டித் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர், நலவாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், மருத்துவ வசதி குறைந்த இடங்களில் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் உறுதித் திட்டம் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நமது மருத்துவர்கள் கொரோனா தடுப்பு, சிகிச்சை ஆகியவற்றுக்கான நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். பல சிக்கல்கள் இருந்தபோதும் இந்தியாவின் நிலைமை பிற வளர்ந்த நாடுகளைவிடச் சிலவற்றில் மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அனைவரும் அதிக விழிப்புணர்வுடன் கொரோனாவைத் தடுப்பதற்கேற்ற பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இப்போது மருத்துவத்துறையினர் யோகாவை ஊக்குவிக்க முன்வந்துள்ளதாகவும், கொரோனாவுக்குப் பிந்தைய சிக்கல்களை எதிர்கொண்டு முறியடிக்க யோகா எவ்வாறு உதவும் என்பது குறித்து மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.