அமெரிக்காவின் மாடெர்னா கொரோனா தடுப்பூசியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவும், அவசரகால பயன்பாட்டிற்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், மும்பையை தலைமையகமாகக் கொண்ட, பன்னாட்டு மருந்து கம்பெனியான சிப்லா, மாடெர்னா தடுப்பூசியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவும், அவசர கால பயன்பாட்டிற்கும் அனுமதி கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட அவசர கால பயன்பாட்டிற்கு மாடெர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, நிதி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்க தயாரிப்பான மாடெர்னா தடுப்பூசி, இந்தியாவில் நான்காவதாக பயன்பாட்டுக்கு வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில், செல்களை செயல்பட வைக்கும் எம்ஆர்என்ஏ (mRNA) முறையில் மாடெர்னா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
கார்களில் Lamborghini அல்லது McLarens உயர் ரகமானவை என கருதப்படுவது போல கொரோனா தடுப்பு மருந்துகளில், எம்ஆர்என்ஏ வகையை சேர்ந்த மாடர்னா தடுப்பூசி உயர் ரகமாக கருதப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செல்வ வளமிக்க வளர்ந்த நாடுகள் மாடெர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தடுப்பு மருந்துகள் பெரிய அளவிலான உடல்நல பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த தடுப்பு மருந்துகள், 90 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோய் எதிர்ப்புத் திறனை வழங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.