காங்கிரஸ் டூல்கிட் வழக்கில், ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம், டெல்லி போலீசார் பெங்களூரு சென்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா, கடந்த 18ஆம் தேதி ட்விட்டரில் காங்கிரசை குற்றம்சாட்டும் பதிவு ஒன்றை இட்டிருந்தார். பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கொரோனா பேரிடரை அரசு கையாளும் முறையை அவதூறு செய்தும் காங்கிரஸ் தயாரித்துள்ள டூல்கிட் என சில ஸ்கிரீன்ஷாட்டுகளையும் அவர் பதிந்திருந்தார்.
ஆனால், பாஜக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருப்பது போலியானது என காங்கிரஸ் புகார் கூறியதை அடுத்து, அது "திரிக்கப்பட்ட உள்ளடக்கம்" என ட்விட்டர் டேக் செய்திருந்தது. இதுகுறித்து ட்விட்டருக்கு விளக்கம் கேட்டு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியதோடு, டெல்லி போலீஸ் தனிப்படைகள், டெல்லி மற்றும் குர்காவோனில் ட்விட்டர் அலுவலகத்திற்கும் சென்றன.
இந்நிலையில், டெல்லி தனிப்படை போலீசார் கடந்த 31ஆம் தேதி பெங்களூரு சென்று, ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குநர் மணீஷ் மஹேஸ்வரியிடம், காங்கிரஸ் டூல்கிட் வழக்கு குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குநரின் பதில் தெளிவில்லாமல் இருந்ததால் மூன்றாவது முறையாக ட்விட்டர் அலுவலகங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் கடந்த 5ஆம் தேதி இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் வெளியான பதிவு, பகைமையையும் மதக் கலவரத்தையும் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, அதை நீக்காத காரணத்திற்காக, ட்விட்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், மூன்றாம் நபர் ஒருவர் பதிவிடும் உள்ளடக்கத்திற்காக ட்விட்டர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்ற சட்டபாதுகாப்பை அந்நிறுவனம் இழந்துள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ட்விட்டர் கடைப்பிடிக்க மறுப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்த நிலையில், ட்விட்டர் இந்தியா மேலாண் இயக்குநரிடம் போலீஸ் விசாரணை, முக்கியமான சட்டப்பாதுகாப்பு ரத்து உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.