டுவிட்டர் நிறுவனம், அரசின் டிஜிட்டல் கொள்கைகளை அனுசரிக்க மறுப்பதுடன், பல சந்தர்ப்பங்களை வழங்கிய பிறகும், வேண்டுமென்றே அரசுடன் ஒத்துழைக்காமல் இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டி உள்ளார்.
பேச்சு சுதந்திரத்தை தூக்கி பிடிப்பதாக கூறிக்கொள்ளும் டுவிட்டர், அரசின் வழிகாட்டு விதிமுறைகளை வேண்டும் என்றே புறக்கணிப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே இந்தியாவில் டுவிட்டருக்கு வழங்கப்பட்டிருந்த சட்டபூர்வ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாம் நபர் ஒருவர் பதிவிட்ட உள்ளடக்கத்திற்காக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், டுவிட்டர் மீது முதலாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி வயதான இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படும் காட்சிகளை மூன்றாம் நபர் ஒருவர் வெளியிட்டார். அந்த காட்சிகள் மதவாத தாக்குதல் என சித்தரிக்கப்பட்டதை அகற்றாமல் இருந்ததற்காக டுவிட்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.