ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதும் என்றும், அதன் மூலம் அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்புத் திறன் கிடைத்து விடும் என்றும் தாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 16 முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை 260 மருத்துவபணியாளர்களுக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் போடப்பட்டு நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இவர்களில் ஏற்கனவே தொற்று பாதித்து குணமடைந்தவர்களுக்கு, தொற்று ஏற்படாதவர்களை விட அதிக அளவிலான ஆன்டிபாடீஸ் திறன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே, கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் கழித்து ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதும் எனவும், அது இரண்டு டோசுகளுக்கான பணியை செய்யும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.