கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என பரிந்துரை செய்துள்ள மருத்துவ வல்லுநர்கள், திட்டமிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற கொரோனாக்களுக்கு வித்திடலாம் என எச்சரித்துள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவர்கள், கொரோனா தடுப்புக்கான தேசிய பணிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் குழு, பிரதமருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், பெருந்திரளான மக்களுக்கு, பாரபட்சமின்றி, அரைகுறையாக தடுப்பூசி போடுவது, தடுப்பு மருந்துகளை விஞ்சும் வகையில் உருமாற்றக் கொரோனாக்களுக்கு வித்திடலாம் என எச்சரித்துள்ளனர்.
சிறார்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போடுவதைவிட, பலவீனமானவர்களுக்கும் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதையே தற்போது இலக்காக கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத்தேவையில்லை என்றும், அப்படி தடுப்பூசி போடுவதால் பலனுண்டு என சான்றுகளை திரட்டிய பிறகு செயல்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.