கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதற்கான காரணங்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..
கொரோனா பாதித்த காலகட்டத்தில் மட்டுமின்றி, கொரோனாவுக்கு பிந்தைய நாட்களிலும் உடல் நலத்தை பராமரிப்பது அவசியம். கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர், அவ்வப்போது தங்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்பதோடு, மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சூடான நீர், உணவுகளை எடுத்துக்கொள்வது, குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், பழைய உணவுகளை தவிர்ப்பது நல்லது என்றும், 8 மணி நேர தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையிலும், வீடுகளிலும் சிகிச்சையில் இருந்து பின் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் கடின உடற்பயிற்சிகளை 3 மாத காலத்துக்கு மேற்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா தொற்றானது, ஒருவருக்கு தொற்றும் போது, அவரின் உடல் உறுப்புகளை கடுமையாக பாதித்து விடுவதால், குணமடைந்த பின்னரும், அவருடைய உடல் உறுப்புகள், மூட்டுகள், தசைகள் முழுமையாக சரியாக சீரான கால இடைவெளி எடுத்துக்கொள்ளும் என்பதே இதற்குக் காரணம். உடனடியாக, உடலை வருத்திக் கொள்ளும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் மேலும் வலுவிழந்து ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலை வருத்திக் கொள்ளும் வகையில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவ வல்லுநர்கள், ஏற்கனவே வலுவிழந்துள்ள உடல் உறுப்புகள் மேலும் பாதிக்கப்படும் என்பதால் குணமடைவதில் இருந்து அடுத்த 3 மாத காலத்துக்கு உடற்பயிற்சிகளை தவிர்ப்பது அறவே நல்லது என பரிந்துரைக்கின்றனர்.