இந்திய கடற்படைக்காக மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக ஹெலிகாப்டர்கள் கடற்படையின் கிழக்கு பிராந்திய குழுமத்தில் சேர்க்கப்பட்டன.
விசாகப்பட்டினத்தில் கிழக்கு பிராந்திய கடற்படையின் கமாண்டிங் அதிகாரி அஜேந்திரா பகதூர் சிங் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 ஹெலிகாப்டர்களும் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டன. அப்போது தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் அமர்த்தப்பட உள்ள இந்த ஹெலிகாப்டர்களில் கடல் பிராந்திய உளவுப்பணிக்காக சிறப்பு வாய்ந்த நவீன ரேடார் கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவு மற்றும் பகலில் கடலில் தேடும் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்புகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.