டெல்லியில் நடைபெற்று வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டிட பணிகளுக்காக, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் செலவிடப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்த கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என தாக்கலான மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளுக்கான நிதியில் இருந்து சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு மார்ச் வரை 195 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் கட்டுமானப்பணிகளை நிறுத்தினால், அதை நம்பி உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் திட்டத்தை தள்ளிவைத்தால் செலவினம் அதிகரிக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.