தென்மேற்குப் பருவமழை கேரளத்தின் தென்பகுதியில் இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழைப்பொழிவைக் கொடுப்பது தென்மேற்குப் பருவக்காற்றாகும். கேரளத்தில் இன்று பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாக ஞாயிறன்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது. இந்நிலையில் கேரளத்தின் தென்பகுதியில் இன்று பருவமழை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்றுக் கேரளத்தின் வடபகுதி, கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் என முன்னேறிச் செல்லும். ஜூலை முதல் வாரத்தில் நாட்டின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளுக்குத் தென்மேற்குப் பருவமழை சென்றடையும். வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் சராசரியாகவும், நடு மாநிலங்களில் சராசரியை விட அதிகமாகவும், கிழக்கு வடகிழக்கு மாநிலங்களில் சராசரியை விடக் குறைவாகவும் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை முன்பு தெரிவித்தது.