ஐதராபாத் பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு மத்திய அரசு முன்பணமாக 1500 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.
பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனை நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும். இந்நிலையில் 30 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்குவதற்காக 1500 கோடி ரூபாயை முன்பணமாகச் செலுத்தியுள்ளதாக மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் இந்த மருந்து உற்பத்தி செய்யப்பட்டு அரசுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தடுப்பு மருந்து உற்பத்திக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கும் நிதியுதவி செய்வதன் ஒரு பகுதியாக இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது கோவாக்சின் தடுப்பு மருந்துக்குப் பின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தாகும்.