கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் ஃபைசர், மாடர்னா நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கடந்த ஒரு மாத காலமாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இந்தியாவிற்கு தங்கள் கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால், அதன் காரணமாக பக்கவிளைவுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் தங்கள் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் எந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசு இந்த பாதுகாப்பை வழங்கவில்லை.
ஆனால் அமெரிக்கா மட்டும் அல்லாமல் பைசர் மற்றும் மாடர்னா தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து நாடுகளிலும் அந்நிறுவன தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர முடியாத பாதுகாப்பை அந்நதந்த நாடுகள் வழங்கியுள்ளன.
இதனை சுட்டிக்காட்டி இந்தியாவில் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அதனை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஃபைசர் மற்றும் மாடர்னாவிற்கு இழப்பீடு கோருவதில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டால் அதே பாதுகாப்பை தங்களுக்கும் வழங்க வண்டும் என்று இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.