கொரோனாவை எதிர்த்து மாநில அரசு போராடி வரும் வேளையில், அனுபவமிக்க அதிகாரியான தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபாத்யாயாவை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க முடியாது என, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
மமதாவுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்துள்ள நிலையில், தலைமைச் செயலாளராக இருக்கும் அலாபன் பந்தோபாத்யாயாவை திரும்ப அழைத்து, இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் ஆஜராகுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. எந்த முன்னறிவிப்பும் இல்லாத மத்திய அரசின் இந்த உத்தரவால் தாம் அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்துள்ளதாக, தமது கடிதத்தில் மமதா குறிப்பிட்டுள்ளார்.
முறையான சட்டபூர்வ ஆலோசனைகளுக்குப் பிறகே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள அவரது சேவையை திரும்ப பெற்று மாநில மக்களை வாட்டும் செயலில் மத்திய அரசு இறங்காது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.