கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியைப் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதனால் லட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும் மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மேற்குக் கடற்கரை மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அதைத் துணிச்சலுடன் மக்கள் எதிர்கொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர், மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தலைவணங்குவதாகத் தெரிவித்தார். புயல் மழை வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு உதவி செய்யும் என உறுதியளித்தார்.
கொரோனாவை முழு வலிமையுடன் எதிர்த்து வரும் நேரத்தில், இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். கொரோனா இரண்டாவது அலையின்போது தொலைவுப் பகுதிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்குவது சவாலாக உள்ளதாகவும், ஆக்சிஜன் டேங்கர்களைக் கொண்டு செல்லும் ஓட்டுநர்களின் உதவியுடன் அதை எதிர்கொண்டு லட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இயல்பாக ஒரு நாளைக்குத் தொள்ளாயிரம் டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டதாகவும், இப்போது அது ஒன்பதாயிரத்து 500 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.