கிழக்கு லடாக்கில் அடிக்கடி மோதல் ஏற்படும் அனைத்து நிலைகளில் இருந்தும் சீனப் படையினரை விலக்கிக் கொள்ளும் வரை பதற்றம் தணியாது என ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி நிலவரம் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி நரவானே செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து சீனப் படையினர் சற்றுப் பின்வாங்கியுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் இருந்து பின்வாங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அனைத்து முக்கியமான நிலைகளிலும் போதுமான வீரர்களை நிறுத்தி அவற்றை இந்திய ராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், எந்த நடவடிக்கைக்கும் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். அடிக்கடி மோதல் ஏற்படும் அனைத்து நிலைகளிலும் இருந்து சீனப் படைகள் முற்றிலும் விலக்கப்படும் வரை பதற்றம் தணியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லையில் ஒருதரப்பாக எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது என்கிற உடன்படிக்கையைச் சீன ராணுவம் மீறியுள்ளதாக நரவானே குறிப்பிட்டார்.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என நாம் விரும்புவதால் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். 2020 ஏப்ரலுக்கு முன்பிருந்த நிலையைப் பராமரிக்க வேண்டும் என ராணுவ நிலையிலான அடுத்த சுற்றுப் பேச்சில் வலியுறுத்தப்படும் என்றும் நரவானே தெரிவித்தார்.