இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டுவிட்டரின் சேவைகள் தொடர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக டுவிட்டரின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்திய மக்களுக்கு சேவை செய்ய டுவிட்டர் உறுதி பூண்டுள்ளதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களின் தகவல் தொடர்புக்கு டுவிட்டரின் சேவை மிகவும் முக்கியமாக உள்ளதாவும் அவர் கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட டூல்கிட் சர்ச்சை மற்றும் அதனால் அரசுடன் ஏற்பட்ட உரசலை குறிப்பிட்ட அவர், பேச்சுரிமைக்கு பலமான அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த விவகாரத்தில் போலீஸ் தங்களை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாகவும் கூறினார்.
புதிய டிஜிட்டல் கொள்கைகளை அமல்படுத்தினாலும், சுதந்திரமான, வெளிப்படையான பேச்சுரிமையை தடுக்கும் விதிகள் அந்த கொள்கையில் இருந்தால் அவற்றை நீக்குமாறு டுவிட்டர் குரல் கொடுக்கும் எனவும் கூறினார்.