வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக இன்று கரையைக் கடக்கிறது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.
இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிஸா மாநிலம் பாரதீப்க்கு வடகிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், பாலசோருக்கு தென்கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் திகாவுக்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
புயல் தொடர்ந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகர்தீவுகள் இடையே தாம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகலில் யாஸ் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிஸா, மேற்குவங்க கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா- மேற்கு வங்கம் மாநிலங்களில் 20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றம் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.