இந்திய வங்கிகளில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
சவ்ரப் பந்தாரே என்பவர் எழுப்பியுள்ள கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் 90 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக 45 ஆயிரத்து 613 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 78 ஆயிரம் கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாயும், இதனைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட வங்கிகளில் நடந்த மொத்த மோசடி மட்டும் ஏறத்தாழ 2 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் மொத்த வங்கிகளில் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.