ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றில் சித்தமருத்துவர் தரும் லேகியத்தால் கொரோனா விரைவாக குணமாவதாக பரவிய தகவலை உண்மை என நம்பி பெரும்கூட்டமாக மக்கள் திரண்டதால் கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் தவித்ததால், சம்பந்தப்பட்ட சித்தமருந்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். லேகியத்துக்காக திரண்ட கொரோனா படை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
மக்கள் முண்டியடித்துக் கொண்டு நீண்டவரிசையில் நிற்பதை பார்த்து ஏதோ மது வாங்க நிற்கும் பொறுப்பற்ற குடிகாரர்கள் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். ஒரு உருண்டை கிடைச்சா கூட போதும் நம்ம உசுர காப்பற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், சித்தமருத்துவ சிகாமணி ஒருவரின் தயாரிப்பான சித்தமருந்து லேகியம் வாங்குவதற்காக வரிசை கட்டி நிற்கின்றனர்.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் முத்துகூறு கிராமத்தில் கொரோனாவில் இருந்து உயிர் காக்கும் சித்தமருத்துவ லேகியம் 3 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட இருப்பதாக வாட்ஸ் ஆப்பில் வந்ததகவலை நம்பி, அங்கு திரண்டதோ 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற 10 போலீசாருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிபோய் விட்டனர்
இந்த கூட்டத்தால் புதிதாக பலருக்கு கொரோனா தொற்று பரவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கருதி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சித்தமருந்து விநியோகிக்க தடை விதிப்பதாக அறிவித்தார். ஆனால் அந்த பகுதி எம்.எல்.ஏ காக்கானி கோவர்தன் ரெட்டி மக்களுக்கு அறிவித்தபடி சித்தமருந்துகள் வழங்கப்படும் என்று அறிவித்து மக்களுக்கு சித்தமருந்துகளை வழங்கினார்
கூட்டத்தை உள்ளூர் இளைஞர்கள் ஒழுங்குப்படுத்திய நிலையில், பலர் மணி கணக்கில் காத்து நின்றதால் நிற்க இயலாமல் சிலர் சோர்வடைந்து தரையில் சாய்ந்துவிட்டனர்
வரிசையில் காத்திருந்த பலர், நமக்கு கிடைக்க போவது திரவ வடிவிலான சித்தமருந்தாக இருக்கும் என்று கருதி காலி தண்ணீர் பாட்டிலுடன் காத்திருந்தனர்
கொழுத்தும் வெயிலில் காத்துக்கிடந்த பலருக்கு சித்தமருந்துகள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்த சித்தமருந்து நல்ல பலன் அளிப்பதாக கூறுவதை ஆய்வு செய்து அனுமதி தருமாறு ஆயுஷ் அமைச்சகத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதால் மக்களுக்கு இந்த மருந்து மீது புது நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்னும் சம்பந்தப்பட்ட சித்தமருந்துக்கு கொரோனாவை குணப்படுத்தும் என்ற அறிவியல் பூர்வ நிரூபண அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அதே நேரத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லா சூழலில், தனியார் மருத்துவமனைக்கு சென்றால் வசூலிக்கப்படும் லட்சகணக்கான ரூபாய் கட்டணங்களுக்கு அஞ்சியே, வரும் முன்காக்கும் பொருட்டு, மக்கள் இது போன்ற சித்தமருந்துகளை நாடுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சித்த மருந்து வாங்க, பெரும் கூட்டமாக முண்டியடித்த பொறுப்பற்ற கூட்டத்தால் அங்கிருந்து பலருக்கு கொரோனா பெருந்தொற்று பரவ காரணமாக அமைந்துவிடலாம் என சுகாதாரதுறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.