மும்பை அருகே அரபிக் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 188 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், 37 உடல்களை மீட்டுள்ளதாகவும் இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
மும்பைக்குத் தென்மேற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய்க் கிணறு பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் டவ் தே புயலின் காரணமாகக் கடலில் மூழ்கியது. அதிலிருந்த 261 பேரும் கடலில் தத்தளித்தனர். தகவல் அறிந்த இந்தியக் கடற்படைக் கப்பல்கள் அந்த இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
இரவுபகலாக மீட்புப் பணி நடைபெற்ற நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட 188 பேரையும், உயிரிழந்த 37 பேரின் உடல்களையும் கடற்படைக் கப்பல் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. இன்னும் 36 பேரைக் காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணியில் கடற்படைக் கப்பல், ஹெலிகாப்டர், விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.