அதி தீவிரப் புயலாக உருமாறியுள்ள டவ் தே புயல் குஜராத் மாநிலத்தில் நாளை கரையைக் கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் டவ்-தே புயலாக உருவெடுத்தது. இந்தப் புயல் அதி தீவிரப் புயலாக மாறி கடலோரப் பகுதிகளில் கடும் சேதத்தை விளைவித்து வருகிறது.
டவ் தே புயல் தற்போது பனாஜிக்கு வடமேற்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்குத் தெற்கே 210 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் கடல் பகுதிக்கு நகர்ந்து செல்லும் டவ் தே புயல் நாளை அதிகாலை குஜராத்தின் போர்பந்தருக்கும், மஹூவாவுக்கும் இடையே அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், கேரளா, கோவா, குஜராத்தில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் ஆக்ரோஷமான அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, டவ்- தே புயலுக்கு கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிர மாநிலங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயல் கரையைக் கடக்கும்போது குஜராத்தின் போர்பந்தர், பாவ்நகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சவுராஷ்டிரா, கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேரை வெளியேற்றும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.