கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில் நான்கில் மூன்று பங்கு மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களும் இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்க வேண்டும் என்று பார்கவா கூறியுள்ளார்.
தொற்று பாதிப்பு சதவிகிதத்தை பாதியாகக் குறைத்தால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். டெல்லியில் 35 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு 17 சதவிகிதமாக குறைந்த போதிலும், கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அது பேரழிவாக அமையும் எனவும் பார்கவா கூறியுள்ளார்.