மகராஷ்டிராவில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய தாயின் மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியரின் நேர்மையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
அமகத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஷீத் சேக், பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை ரஷீத் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவரது தாய் தள்ளுவண்டியில் மார்க்கெட் பகுதியில் நின்று காய்கறி வியாபாரம் செய்துள்ளார்.
ஊரடங்கில் வீதிவீதியாக சென்று காய்கறி வியாபாரம் செய்யவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் தள்ளுவண்டியை நிறுத்தி விற்பனை செய்து கொண்டிருந்த தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்தார் ரஷீத்.
இது குறித்து ஏற்கனவே தாயிடம் எச்சரித்தும் அவர் விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ள ரஷீத், அரசு அதிகாரிகளின் நேர்மைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.