கேரள சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதை ஒட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில டிஜிபி லோகநாத் பெஹரா, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது 3 ஆயிரத்து 300 துணை ராணுவப் படையினருடன், 30 ஆயிரம் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
அரசியல் மற்றும் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கை கைதுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசியல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் லோகநாத் பெஹரா கேட்டுக் கொண்டார்.