கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அடித்துக் கொல்லப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களிடையே சமூக விரோதிகள் பீதியை கிளப்பி வருகின்றனர். கொரோனா காலத்திலும் ரத்தம் குடிக்க அலையும் வதந்தி வல்லூறுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
இந்த சம்பவம் எட்டு மாதங்களுக்கு பாட்டியலாவில் நடந்தது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் டிப்ரஷனால் பாதிக்கப்பட்ட நோயாளியை தாக்கியதாக மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்
இந்த வீடியோவையும், வங்களாதேச நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வயோதிகரை உறவினரே கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை இணைத்து சமூகவிரோதிகள் சிலர் கொரோனா சிகிச்சைக்கு சென்ற நோயாளிகள் கொல்லப்படுவதாக போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கர்நாடகாவில் உள்ள தனது மகளது வீட்டிற்கு சென்ற நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆக்ஸ் போர்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு 200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்கள் வழக்கமாக சாப்பிடும் சர்க்கரை நோய்க்காண மாத்திரை ஏதும் வழங்காமலும், ஆக்ஸிஜன் பொறுத்தாமலும் அலட்சியம் காட்டிய மருத்துவமனையால் தனது தந்தை கொல்லப்பட்டு விட்டதாக ஆதங்கத்தோடு அவரது மகள் தெரிவித்த பேட்டியை கட் செய்து, இரண்டு பழைய வீடியோக்களுடன் இணைத்து ஏதோ இந்தியாவில் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அடித்துக் கொல்வது போன்ற வதந்தியை பரப்பி பீதியடைய செய்து வருகின்றது ரத்தம் குடிக்க அலையும் சில வதந்தி வல்லூறுகள் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.
இது போன்ற வீடியோக்கள் மற்றும் போட்டோ டெம்ளட்டுகளின் உண்மை தன்மை அறியாமல் சமூக வலைதளங்களில் பகிர்வது கூட ஒரு வித சைபர் தாக்குதல் தான் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட அவசர புத்திக்காரர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.