ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என பொய்யான தகவலை கூறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச அரசு எச்சரித்துள்ளது.
பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக கூறுவது பற்றி விசாரணை நடத்திய போது அது பொய்யான தகவல் என தெரிய வந்துள்ளதாக மாநில கூடுதல் தலைமை செயலாளர் நவனீத் சேகல் தெரிவித்தார்.
அதே நேரம் உண்மையிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நேரிடும் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தேவையான அளவுக்கு ஆக்சிஜனை பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
ஆக்சிஜன் இல்லை என்று பொய்யாக கூறி நோயாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் மருத்துவமனைகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சில தினங்களுக்கு முன்னர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.