கர்நாடகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுள் ஒருவர் கர்நாடகத்தைச் சேர்ந்த மோகன் எம். சதானந்தா கவுடர். பணியின் காரணமாக டெல்லியில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சனிகிழமையன்று இரவு உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து நீதிபதி சதனாந்தா கவுடர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் தற்போது வீரியமிக்க கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறப்பு எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் 62 வயதான உச்சநீதிமன்ற நீதிபதி சதானந்தா கவுடர் கொரொனா தொற்றால் மரணமடைந்தாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி சதானந்தா கவுடர் 1958ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர். 1980ம் ஆண்டில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தவர், 2003 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டே நிரந்தர நீதிபதியாகவும் பணி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு 12 வருடமாக நீதிபதியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2016 ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் கடந்த 2017ம் ஆண்டு டெல்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நுரையீரல் தொற்றுக் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சதானந்தா கவுடர் பரிதாபமாக இறந்ததைடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.