கொரனா பரவலின் 2ஆம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்தை கடந்து அதிகரித்து வருகிறது. இருமுறை உருமாறிய கொரோனா, மும்முறை உருமாறிய கொரோனா வகைகளும் சில மாநிலங்களில் பரவி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகும் நிலையில் ஆக்சிஜன், தடுப்பூசி விநியோகத்திற்கு தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றனர். தமிழகத்தில் நாள்தோறும் நடத்தப்படும் பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதமர் மோடியிடம் தலைமைச் செயலாளர் விளக்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும், டெல்லியில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் இல்லை என்பதற்காக, தங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். டெல்லிக்கு அனுப்பப்படும் டேங்கர் வேறு மாநிலத்தில் நிறுத்தப்பட்டால், அதுகுறித்து மத்திய அரசில் தாம் யாரிடம் முறையிடுவது என்றும் கெஜ்ரிவால் கேட்டார்.
இதனிடையே கெஜ்ரிவால் மிகவும் தரம் தாழ்ந்து விட்டதாகவும், பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் செய்ததன் மூலம், தமது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.