கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சக்கட்டதை எட்டியுள்ள நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 32 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 247 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகி உள்ளனர். உலகளவில் கொரோனா பாதிக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவராக உள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிகமோசமாகி வரும் நிலையில், அதனைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, ஆக்சிஜன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணி குறித்து உயர்மட்டக்குழுவுடன் இன்று ஆலோசிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் தமது மேற்கு வங்க பிரசார பயணத்தை ரத்து செய்வதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் ஆக்சிஜன் விநியோகம் குறித்து மாநில அரசுகளுடன் கலந்துரையாடவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.