உலகிலேயே முதல் முறையாக, இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,78,841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் பெருந்தொற்றுக்கு 2 ஆயிரத்து 104 பேர் உயிரிழந்துள்ளார். 16 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 23 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 22 சதவீதம் பேர் மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர்கள். அங்கு ஒரே நாளில் 67 ஆயிரத்து 468 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாள் பலி எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாமிடத்திலும், உத்தரப்பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி அங்கு 3 லட்சத்து 310 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. ஆனால், உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில்தான் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.