மகாராஷ்டிராவில் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால், பிராணவாயு விநியோகம் முடங்கி, கொரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜனை, மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கிற்கு மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் டேங்கரில் இருந்து, பிராணவாயு முழுவதுமாக வெளியேறியது.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் மூலம் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியது.
இதில், போதிய பிராணவாயு கிடைக்காமல், கொரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என கவலை தெரிவித்துள்ள மாகாரஷ்டிரா அரசு, ஆக்சிஜன் கசிவு விவகாரத்தால் ஏற்பட்ட பெருந்துயரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளது.
ஆக்சிஜன் கசிவு விவகாரத்தில் உயிர்வளி கிடைக்காமல் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.
நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.