முன்னெப்போதும் இல்லா வகையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அதைத் தடுக்கும் வகையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
டெல்லியில் வார இறுதி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
சண்டிகரில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இன்றியமையாச் சேவைகளுக்கான வாகனங்களைத் தவிர வேறெந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாததால் சாலைகள், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மே 15 வரை ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ, மொரதாபாத் உள்ளிட்ட நகரங்களில் சந்தைகள், கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகளில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் இன்றி வருவோருக்கு முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகனப் போக்குவரத்தும் ஆள்நடமாட்டமும் இன்றிச் சாலைகள் அமைதியாகக் காணப்படுகிறது.