கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றுமையுடன் போராடி கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகொள்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை நாட்டில் தீவிரம் அடைந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குவங்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியவில்லை என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டெல்லி ,மகாராஷ்ட்ரா ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா போன்ற பல்வேறு மாநில அரசுகள் சுவாசக்குழாய்கள், ரெம்டிசிவர் மருந்துகள், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளன. உடனடியாக தேவையான மருந்து, தடுப்பூசி மற்றும் உபகரணங்களை வழங்குமாறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி அவசரமான கொரோனா ஆய்வுக்கூட்டத்தைக் கூட்டினார். மாநிலங்களில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைபாடு , சுவாசக்குழாய்கள், ஆக்சிஜன் உற்பத்தி போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
162 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து 32 மாநிலங்களிலும் செயல்பட்டு வருவதாகவும் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு சுமார் ஒருலட்சம் சிலிண்டர்கள் உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசித்து உற்பத்தியை அதிகரிக்குமாறு மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.