கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் போராடி வரும் சூழலில் பல்வேறு மாநில ஆளுநர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தடுப்பூசிகளைத் தேவையான அளவுக்கு மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசித் தட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விவகாரம் விவாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் மூன்று நாள் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய போது அறிவுறுத்தியிருந்தார். இதனையொட்டி கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் கோரியுள்ளன. கையிருப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகவும் சில மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆளுநர்களிடம் இப்பிரச்சினை குறித்து ஆலோசித்த மோடி, தேவையான அளவுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் முழுவீச்சில் மருந்து உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற அனைத்து பலங்களையும் ஒன்றிணைத்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் ஆளுநர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.