தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு விதித்த தடையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.
நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் 24 மணி நேர தடையை விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கொல்கத்தா காந்தி சிலைக்கு அருகே, வீல் சேரில் அமர்ந்தவாறு அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 8 கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது கூச்பீகார் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூச் பீகாரில் பேசும் போது, பாதுகாப்பு படையினருக்கு எதிராக அவர் பேசினார் என்றும், வகுப்புவாத அரசியலை தூண்டினார் என்றும் மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேர பிரச்சார தடையை தேர்தல் ஆணையம் நேற்று விதித்தது.