சத்தீஸ்கரில், மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலர் பலியாவதால் ரெய்ப்பூரில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையான பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில், எங்கு பார்த்தாலும் மனித உடல்களாகவே காணப்படுகிறது.
பிணவறைகளில் உடல்களை வைக்க இடமில்லை என்பதால் தரையிலும், திறந்தவெளியிலும் உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் உயிழந்தவர்களை தகனம் செய்யும் வேகத்தை விட அதிக விரைவாக இறப்புகள் நிகழ்வதால் உடல்களை எங்கு வைப்பது என தெரியாமல் திகைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரெய்ப்பூரின் மயானங்களும் உடல்களின் வருகையால் திணறுவதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 55 உடல்கள் அங்கு தகனம் செய்யப்படுகின்றன.
சத்தீஸ்கரில் தினசரி வைரஸ் தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 122 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.