ஏர் இந்தியா விமானத்தில் லேசான அதிர்வை உணர்ந்த விமானிகள் கோழிக்கோடு டேபிள் டாப் விமான நிலைய ஓடு தளத்தை தவிர்த்து கொச்சியில் தரையிறக்கியதால் 188 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பினர்.
ரியாத்தில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட இந்த விமானம் மேலே எழுந்த போது விமானிகள் சிறிய அதிர்வை உணர்ந்துள்ளனர். இதனை அடுத்து ரியாத் விமான கட்டுப்பாட்டு மையத்தை விமானிகள் தொடர்பு கொண்ட போது ஓடுதளத்தில் டயரின் சிதைவுகள் காணப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் விமானம் மேலே எழும்பிய போது ஏற்பட்ட அதிர்வு, விமானத்தின் லேண்டிங் கியரில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் ரிஸ்க் அதிகம் உள்ள கோழிக்கோடு டேபிள் டாப் ஓடுதளத்தில் விமானத்தை தரை இறக்கும் முடிவை விமானிகள் யஷத் பக்கா மற்றும் நிஷாத் அரவந்தகர் ஆகியோர் கைவிட்டனர்.
பிறகு அந்த விமானம் 188 பேருடன் கொச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில், கோழிக்கோடு ஓடுதளத்தில் இறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக விமானத்தை கொச்சிக்கு திருப்பியது நல்ல முடிவு என, ஏர் இந்தியா நிர்வாகம் விமானிகளை பாராட்டியுள்ளது.