கடந்த ஓராண்டாக பொதுமுடக்கங்கள், தடுப்பு நடவடிக்கைகள் என கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா மீண்டும் இரண்டாவது பேரலையாக பரவி வருவதற்கு காரணம் என்ன என்பதை விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு பின், தொற்று பரவல் குறையத் துவங்கியதும், மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார மீட்புக்கும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.
ஆனால் மக்கள் கொரோனா பாதிப்பு முடிந்துவிட்டதாக கருதினர். இதனால் உருவான அலட்சியமே முதல் காரணமாக கருதப்படுகிறது. பொது இடங்களில் திரண்ட பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை. தனி மனித இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.
இவை அனைத்தும் சேர்ந்து இரண்டாம் அலைக்கு வழிவகுத்துவிட்டன. கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைரஸ் உருமாற்றம் அடைந்ததும், தேர்தல் , ஆன்மீகம் மற்றும் இதர பொது நிகழ்ச்சிகளில் தகுந்த பாதுகாப்பு இன்றி மக்கள் பங்கேற்றதும், இரண்டாம் அலை உருவாக காரணமாக அமைந்ததாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சியினரும் பெரும் கூட்டத்தைக் கூட்டி தங்கள் பலத்தை காட்டினர். முகக்கவசம் அணிந்து வருமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியபோதும் பொதுமக்கள் அவற்றை முறையாக பின்பற்றவில்லை.
நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகுதான் தேர்தல் ஆணையமும் எச்சரிக்கை விடுத்தது. வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு வருவோரை முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்றும் விதிகளை கடைபிடிக்காத பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும் கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் உடலில் உருவாகும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனா வைரசை எதிர்த்து போரிடும் திறனை, ஆறு மாதங்களுக்கு பின் இழந்துவிடுகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.