கொரோனா நோய் பரவலை தடுப்பதில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, நாடு தழுவிய ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மாநில முதலமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சில மாநிலங்களில் கொரோனா தொற்று மிகவேகமாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய மோடி, போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பெருந்தொற்று தடுப்பு பணிகளில் சுணக்கம் காட்டக் கூடாது என்று வலியுறுத்திய பிரதமர், சில மாநிலங்களில் நோய் தடுப்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதாக அதிருப்தி தெரிவித்தார்.
கொரோனா இறப்பு விகிதத்தை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மோடி, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது வரவேற்க தக்க முயற்சி என்றார். நாட்டின் பொருளாதாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்பதால், நாடு தழுவிய ஊடரங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமர் தெரிவித்தார்.
ஒட்டு மொத்த பகுதியை தவிர்த்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடங்களை மட்டுமே தனிமைப்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
கொரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்றும், தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த 30 பேரையாவது கண்டறிந்து பரிசோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று தெரிவித்த அவர், தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை எட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் அரசியல் தேவையில்லை என்றும், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு முறை கொரோனா தொற்றை தோற்கடித்த நாம், மீண்டும் ஒரு முறை அதனை வீழ்த்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.