தெலங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டத்திலுள்ள பெம்பர்த்தி கிராமம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது 5 கிலோ தங்க புதையல் கிடைத்தது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நரசிம்ஹா என்பவர் வாங்கியிருந்த அந்த இடத்தில் பூமி பூஜை நடத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது.
அப்போது செம்பு குடம் ஒன்றில் சுமார் ஐந்து கிலோ எடையுடைய தங்க ஆபரணங்கள் கிடைத்தன. அதனைப் பார்த்த கிராமவாசி ஒருவர் சாமி வந்தது போல் வித்தியாசமாக குரல் எழுப்பினார்.
புதையல் பற்றி கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தங்க ஆபரணங்களை கைப்பற்றி கருவூலத்திற்கு எடுத்து சென்றனர். காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின் போது பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களாக அவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.