சர்ச்சைக்குள்ளான மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் முதற்கட்ட விசாரணை நடத்துமாறு சிபிஐ க்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை காவல்துறையில் உள்ள சிலர் வாயிலாக அனில் தேஷ்முக் மிரட்டி பணம் பறித்தார் என மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் பீர் சிங் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஜெயஸ்ரீ பட்டீல் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 15 நாட்களுக்குள் ஆரம்ப விசாரணையை நடத்தி, குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தால் அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை பதியுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.