சத்தீஸ்கரில் நடைபெற்ற மோதலில் 20 மாவோயிஸ்டுகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், சடலங்கள் டிராக்டர் டிராலிகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது உளவு டிரோன்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாதுகாப்பு படையினரை சூழ்ந்து கொண்டு மாவோயிஸ்டுகள் சுமார் 400பேர் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரில் பீஜப்பூர்-சுக்மா மாவட்டங்களின் எல்லையில், மாவோயிஸ்டுகள் தளபதி மாத்வி ஹித்மா (Madvi Hidma) பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கடந்த 2ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஹித்மா மாத்வி தலைக்கு 40 லட்ச ரூபாய் விலை வைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பல தாக்குதல்களை தலைமை தாங்கி நடத்தியவன் என கூறப்படுகிறது. எனவே அவனை வேட்டையாடும் நோக்கத்தோடு, 5 இடங்களில் இருந்து பாதுகாப்பு படை வீரர்கள் நகர்த்தப்பட்டு, ஜூனாகடா என்ற பகுதியில் குழுமியுள்ளனர்.
இதை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த மாவோயிஸ்டுகள் 400 பேர், சனிக்கிழமை பகலில் நாலாபுறம் இருந்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். வெடிகுண்டுகளை வீசி, இலகுரக எந்திர துப்பாக்கிக் கொண்டு கண்மூடித்தனமான தாக்குதலை மாவோயிஸ்டுகள் நிகழ்த்தியுள்ளனர்.
பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலை நடத்த, 3 முதல் 5 மணி நேரம் வரை வனப்பகுதியில் இடைவிடாத துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.
ஒரு கட்டத்தில் பின்வாங்கிய மாவோயிஸ்டுகள், கொல்லப்பட்ட தங்கள் தரப்பினரின் உடலை டிராக்டர் டிராலிகளில் ஏற்றிக் கொண்டு, காட்டுக்குள் ஓடிவிட்டனர். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் ஒரு பெண் நக்சலைட்டின் சடலம் கைப்பற்றப்பட்டது.
மாவோயிஸ்டுகள் தரப்பில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், சடலங்களை டிராக்டர் டிராலியில் அடர்ந்த காட்டுக்குள் மாவோயிஸ்டுகள் எடுத்துச் சென்றதை Heron ரக ட்ரோன் மூலம் உறுதிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூருக்குச் சென்றார். அங்குத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், உள்துறை அமைச்சர் உயர் அதிகாரிகள் ஆகியோருடனான ஆய்வுக்குப் பின் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசினார். நக்சல்களுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்படும் என்றும், முடிவில் அரசே வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் நக்சல் எதிர்ப்புப் படையினர் உட்புறப் பகுதிகளில் முகாம் அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.