இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.14 சதவீத வாக்குகளும், அசாமில் 10.51 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், திரிணமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும் பலப் பரீட்சை நடத்தும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கு மெதினிபூர் மாவட்டத்தில் காரக்பூர் சாதர் தொகுதியில், வங்கமொழி திரைப்பட நடிகர் ஹிரோன் சட்டர்ஜி வாக்களித்தார். 191 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த 30 தொகுதிகளிலும் 10 ஆயிரத்து 620 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் பாஜக பூத் ஏஜெண்டுகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் மிரட்டப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 47 தொகுதிகளுக்கு கடந்த 27ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 39 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. 345 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில், 73 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
10 ஆயிரத்து 592 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 அமைச்சர்கள், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் இரண்டாம் கட்டத்தில் களம் காண்கின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. உடல்வெப்ப நிலையை பரிசோதித்து, சானிட்டைசர் வழங்கி வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
நந்திகிராம் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றார். அப்போது அவருக்கு எதிராக சிலர் முழக்கங்களை எழுப்பினர்.
தமக்கு எதிராக முழக்கம் எழுப்புபவர்கள் பீகார், உத்தரப்பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், மத்திய படைகள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
அங்கிருந்தே மாநில ஆளுநர் ஜகதீர் தங்கருக்கு மொபைலில் பேசிய அவர், உள்ளூர்காரர்களை வாக்களிக்க விடாமல் இடையூறு செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.